சரக்கு, சேவை வரி விதிப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது; மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி

சரக்கு, சேவை வரி விதிப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
சரக்கு, சேவை வரி விதிப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது; மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி
Published on

திருச்சி,

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தொழில் வளர்ச்சி

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம். பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார்மயமாக்க முயற்சிக்கவில்லை. நடத்த முடியாமல் சீர்குலைந்து போன நிறுவனங்களில் தான் மத்திய அரசு தன் பங்கை குறைத்து, அதை சிறப்பாக நடத்த முன் வருபவர்களையும் சேர்க்க முயற்சி எடுக்கிறது. இதனை தனியார்மயமாக்கும் முயற்சி என கூறுவது சரியல்ல. இந்தியா தொழில் வளர்ச்சியில் சிறப்பான இடத்தில் உள்ளது.

காவிரி நீர் பிரச்சினையானது தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை. இதில் பாரதீய ஜனதா மீது குற்றம் சாட்டுவது சரியல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாராளுமன்றத்தை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கோர்ட்டில் பதில் அளித்துள்ளது. ஒற்றை தீர்ப்பாயத்தை கொண்டு வருவது காவிரி மேலாண்மை வாரியத்தை தடுக்கும் முயற்சி என கூறுவதும் தவறு. பிரதமரை தமிழக முதல்-அமைச்சர் சந்தித்து பேசுவதை வைத்துக்கொண்டு, தமிழகத்தை பா.ஜ.க.வின் பினாமி அரசு என்று கூறக்கூடாது. பிரதமரை யார் வேண்டுமானாலும் சந்தித்து பேசலாம்.

பாதிப்பு வராது

சரக்கு, சேவை வரி விதிப்பால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது. காங்கிரஸ் ஆட்சியில் தான் சரக்கு, சேவை வரி மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது நாங்கள் அதனை ஏற்கவில்லை. தற்போது யாரும் பாதிக்கப்படாத வகையில் சில மாற்றங்களை செய்து சரக்கு, சேவை வரியை கொண்டு வந்திருக்கிறோம். எனவே மாநிலங்களுக்கு இதனால் வருவாய் பாதிப்பு ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து புதுக்கோட்டைக்கு சென்ற மத்திய இணை மந்திரி நிர்மலா சீதாராமன், அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:-

எய்ம்ஸ் மருத்துவமனை

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஐந்து இடங்கள் முன்மொழியப்பட்டது. இதில் எந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சொல்லவில்லை. இதில் மாநில அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை. மத்திய அரசின் விவசாயிகளுக்கான காப்பீட்டு திட்டங்களை, தமிழக அரசு விவசாயிகளிடம் முழுமையாக கொண்டு செல்லவில்லை. இதனால் தான் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய காப்பீடு முழுமையாக கிடைக்கவில்லை.

இந்த திட்டத்தை விவசாயிகளிடம் கொண்டு சென்றால், விவசாயிகளுக்கு எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களுக்கு இழப்பீடு தொகை முழுமையாக கிடைக்கும். மாட்டு இறைச்சி சாப்பிடக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. மாடுகளின் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று தான் தெரிவித்துள்ளனர். மேலும் பசுவதை சட்டம் அந்தந்த மாநில வரையறைக்கு உட்பட்டதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com