சரக்கு ரெயில் தீ விபத்து: 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்


சரக்கு ரெயில் தீ விபத்து: 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 14 July 2025 7:51 AM IST (Updated: 14 July 2025 7:51 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாளத்தில் கிடக்கும் சரக்கு வேகன்கள் அகற்றப்பட்ட பின்பு, தண்டவாளம், மின் கேபிள்கள் சரி செய்யும் பணி நடைபெற்றது.

சென்னை,

சென்னை மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து (ஐ.ஓ.சி.) 52 வேகன்களில் டீசல் நிரப்பி சென்ற சரக்கு ரெயிலில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சரக்கு ரெயிலில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

15-க்கு மேற்பட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சரக்கு ரெயில் தீப்பிடித்து எரிந்ததில், அந்த வழித்தடத்தில் உள்ள 4 தண்டவாளங்களும் சேதமடைந்தன. மின் கம்பிகளும் தீயில் எரிந்தன. தீப்பிடித்த வேகன்களும் தடம்புரண்டு, ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதையடுத்து அங்கு சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டன.

முதற்கட்டமாக, மின்சார ரெயில்கள் ஒரு தண்டவாளத்தில் சென்று திரும்பும் வகையில் தண்டவாளம் பராமரிப்பு மற்றும் மின் இணைப்பு பணியை ரெயில்வே ஊழியர்கள் செய்தனர். 4 தண்டவாளங்களில் கிடக்கும் வேகன்களை ராட்சத கிரேன் மூலம் அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் கிடக்கும் சரக்கு வேகன்கள் அகற்றப்பட்ட பின்பு, தண்டவாளம், மின் கேபிள்கள் சரி செய்யும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரானதை அடுத்து, 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. சீரமைக்கப்பட்ட ரெயில் பாதையில் ஆலப்புழா, பாலக்காடு உள்ளிட்ட விரைவு ரெயில்கள் மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டன. இருப்பினும், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.

1,2 தண்டவாளங்களில் சிரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மாலை முழுமையாக பணிகள் நிறைவு பெற்று ரெயில் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

1 More update

Next Story