சென்னை போக்குவரத்து சிக்னல்களில் அடிக்கடி கோளாறு: சாலைகளில் நெரிசல் - என்ன காரணம்.?

சென்னையில் அடிக்கடி ஏற்படும் 'சிக்னல்' முடக்கத்தால், நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தில் 'சிக்கல்' ஏற்படுகிறது.
சென்னை போக்குவரத்து சிக்னல்களில் அடிக்கடி கோளாறு: சாலைகளில் நெரிசல் - என்ன காரணம்.?
Published on

சென்னை,

தலைநகர் சென்னையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து சிக்னல் முடக்கத்தால், சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தில் இடியாப்ப சிக்கல் ஏற்படுகிறது.

300 சிக்னல்கள்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உள்பட்ட சாலை சந்திப்புகளில் 300 சிக்னல்கள் உள்ளன. தானியங்கி முறையில் இயங்கும் இந்த சிக்னல்கள், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்வதற்கு ஏற்ப, குறிப்பிட்ட வினாடிகள் இடைவெளியில் தானாகவே இயங்கி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றன.

ஆனால், தற்போது பல இடங்களில் உள்ள சிக்னல்கள் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, தானியங்கி முறையில் இயங்குவதில்லை. இதனால், அங்குள்ள போக்குவரத்து போலீசாரே குறிப்பிட்ட நேர இடைவெளியில் சிக்னல்களை தனிப்பட்ட முறையில் இயக்கும் நிலை உள்ளது.

பராமரிப்பு ஒப்பந்தம் முடிவு

இதுபோன்ற நேரங்களில், சிக்னல்களில் காத்திருக்க வேண்டிய வினாடிகளை காட்டும் டிஜிட்டல் பலகையும் இயங்குவதில்லை. இதனால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பல முக்கிய சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது. தானியங்கி முறையில் சிக்னல்கள் இயங்காமல் போனதற்கு பராமரிப்பு ஒப்பந்தம் முடிந்து போனதே காரணம் என்று சொல்லப்படுகிறது.

விரைவில் பயன்பாட்டுக்கு வரும்

இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஏ.எம்.சி. எனும் ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் கோருவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. தற்போது, ஒவ்வொரு சிக்னலிலும் உள்ள டிஜிட்டல் வினாடிகள் பாதகையில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிந்து, அனைத்து பாதகைகளும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்" என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com