வாலிபரை குத்திக்கொன்று பிணத்தின் மீது சுயநினைவின்றி கிடந்த நண்பர்


வாலிபரை குத்திக்கொன்று பிணத்தின் மீது சுயநினைவின்றி கிடந்த நண்பர்
x

கோழிக்கறி சமைத்து சாப்பிட்டும், மதுகுடித்தும் நண்பர்கள் உற்சாகமாக இருந்துள்ளனர்.

குமரி,

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கிடந்தார். அவரது உடலின் மீது ஒருவர் சாய்ந்த நிலையில் சுயநினைவின்றி கிடந்தார். மேலும் ஒரு கத்தியும் அங்கே ரத்தக்கறையுடன் தென்பட்டது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த காயங்களுடன் கிடந்தவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அவர் கத்திக்குத்து காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் நிதானமின்றி கிடந்த வாலிபரையும் எழுப்பினர். ஆனால் அவர் சுயநினைவுக்கு வரவில்லை.

பிறகு நடந்த சூழலை பார்த்ததில், வாலிபர் கொல்லப்பட்டுள்ளார் என்ற விவரத்தை போலீசார் உறுதி செய்தனர். மேலும் கொல்லப்பட்டவர் யார்? அவர் அருகே மதுபோதையில் கிடந்தவர் யார்? என்ற விசாரணையை தொடங்கினர். அதில் கொல்லப்பட்டவர் ராஜாக்கமங்கலம் வடலிவிளை பகுதியை சேர்ந்த விஜயகுமாரின் மகன் பரத் (வயது22) என்பதும், போதையில் கிடந்தவர் அவரது நண்பரான மணவாளக்குறிச்சி திருநயினார்குறிச்சி பகுதியை சேர்ந்த தொழிலாளியான அனீஷ் (32) என்பதும் தெரிய வந்தது.

அதாவது பரத், தன்னுடைய நண்பரான அனீஷ்உள்பட 6 பேர் சேர்ந்து நேற்று மாலை வெள்ளிச்சந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தோப்புக்கு சென்றுள்ளனர். அங்கு கோழிக்கறி சமைத்து சாப்பிட்டும், மதுகுடித்தபடியும் உற்சாகமாக இருந்துள்ளனர். இந்த மதுவிருந்தில் போதை தலைக்கேறிய அனீஷ், கோழிக்கறியை சாப்பிடும் போது நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை பரத் கண்டித்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மதுபோதையில் இருந்த அனீஷ், கறி வெட்ட பயன்படுத்திய கத்தியை எடுத்து யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென பரத்தை குத்தினார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். மதுபோதையில் இருந்த அனீஷ் நண்பர் இறந்துவிட்டார் என்பது கூட தெரியாமல் அவரது பிணத்தின் மீது போதையில் சாய்ந்து கிடந்தது விசாரணையில் அம்பலமானது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story