இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு: பிளஸ்-1 மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட நட்பை தொடர்ந்து, பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு: பிளஸ்-1 மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்
Published on

திருச்சி:

வேலூர் மாவட்டம், விருஞ்சிபுரம் கிராமம் தென்னை மரத்தெருவை சோந்தவர் மார்கபந்து. இவரது மகன் கோகுல். இவருக்கும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவிக்கும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி தங்கள் நட்பை வளர்த்துள்ளனா. மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு காதல் அரும்பி இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி கோகுல் செல்போன் மூலம், அந்த மாணவியை தொடர்பு கொண்டு தனக்கு வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று கூறி, அந்த மாணவியை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றுக்கு வருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த மாணவியும் உடனடியாக புறப்பட்டு அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டு, பாலியல் வன்புணாவில் கோகுல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளார். மாணவியை நிர்வாணமாகவும் வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவி, நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் கூறி அழுதார். இதனால் உடனடியாக கோகுலை தொடர்பு கொண்டு மாணவியின் தாய் கண்டித்துள்ளார். அப்போது கோகுல், இணையதளத்தில் மாணவியின் ஆபாச படங்களை பகிராமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இது குறித்து அந்த மாணவி திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் கோகுல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com