

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் காந்தி நகரை சேர்ந்தவர் மூர்த்தி. அவருடைய மனைவி ஜெயம்மாள். இவர்களுடைய மகன் பூபாலன் (வயது 28). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் குருவரெட்டியூரில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார்.
இவரது நெருங்கிய நண்பர்கள் பாபு மற்றும் கவின். இவர்கள் கடந்த ஜனவரி மாதம் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டனர். நண்பர்கள் இறந்த துக்கத்தை பூபாலனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனது உடல்நிலை சரியில்லை எனக்கூறி பெற்றோர்களிடம் புலம்பி வந்துள்ளார். இதனால் அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பூபாலன் உடலில் எந்த வித பாதிப்பும் இல்லை என கூறிவிட்டனர். ஆனாலும் பூபாலன் தனது நண்பர்களை நினைத்து வேதனைப்பட்டு வந்துள்ளார். ஒரு சமயத்தில் மனமுடைந்த அவர், "இனி வாழ்வதை விட சாவதே மேல்" என்ற முடிவுக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று பூபாலன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்றுவிட்டு ஜெயம்மாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பூபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.