1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் புத்தகப்பை எடை எவ்வளவு? மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும்? என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் புத்தகப்பை எடை எவ்வளவு? மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை
Published on

சென்னை,

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஒரு முக்கிய அடையாளமாக புத்தகப்பை இருக்கிறது. புத்தகப்பை சுமந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளை பார்த்து பெற்றோர் வருத்தப்படுவதும் உண்டு. ஏனென்றால் அந்த அளவுக்கு புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை அதிக எடையில் பையில் வைத்து சுமந்து செல்கின்றனர்.

இந்தியாவில் பள்ளி மாணவர்கள் குறைந்த பட்சமாக 6.2 கிலோ முதல் அதிகபட்சமாக 15 கிலோ எடை வரை புத்தகப்பையை சுமந்து செல்வதாகவும், அவர்களின் உடல் எடையில் 30 முதல் 35 சதவீதத்தை புத்தகப்பையாக சுமப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படியாக புத்தகப்பையை சுமந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் முப்பருவ பாடமுறை திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் புத்தகப்பை சுமந்து செல்வதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால் குறைந்த எடையில் தான் இவர்கள் புத்தகப்பையை சுமக்கின்றனர் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பல தனியார் பள்ளிகளில் இந்த முறை எதுவும் நடைமுறையில் இல்லை. இன்றளவும் பல பள்ளிகளில் கூனி குனிந்தபடி புத்தகப்பையை மாணவ-மாணவிகள் சுமந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

இந்தநிலையில் கூடுதல் பாடப்பிரிவு மற்றும் புத்தகப்பை எடை தொடர்பான அறிவுறுத்தலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, மாணவ-மாணவிகளின் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும்? பாடங்கள் பயிற்றுவித்தலை ஒழுங்குபடுத்துவது ஆகியவை தொடர்பான வழிமுறைகளை உருவாக்கி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. அதில் உள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:-

* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.

* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது. (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரைப்படி)

புத்தகப்பை எடை எவ்வளவு?

* மாணவர்களை கூடுதல் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வர சொல்லக்கூடாது.

* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 1 கிலோ, 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எடை 2 முதல் 3 கிலோ, 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 4 கிலோ, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை எடை 4 கிலோ, 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 5 கிலோவுக்கு அதிகம் இருக்கக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com