

சென்னை,
தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழலில், 4 முனைப்போட்டி நிலவும் நிலை உள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி பேச்சு வார்த்தை
தே.மு.தி.க., ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. (ராமதாஸ் அணி), புதிய தமிழகம் உள்ளிட்டவை இன்னும் கூட்டணியை முடிவு செய்து அறிவிக்கவில்லை. இதில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இயங்கி வரும் தே.மு.தி.க., ஆளுங்கட்சியான தி.மு.க.வுடனும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடனும் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வந்தது.
தொடக்கத்தில், 30 தொகுதிகள் என இரு கட்சிகளுடனும் தே.மு.தி.க. பேச்சு வார்த்தையை ஆரம்பித்தது. ஆனால், இரு கட்சிகளும் ஒற்றை இலக்க தொகுதிகளையே தே.மு.தி.க.விடம் முன்வைத்தன. பிரேமலதா விஜயகாந்தும் 15 தொகுதிகள் வரை இறங்கி வந்தார். அதற்கும் இரு கட்சிகளும் சம்மதிக்கவில்லை.
தொண்டர்கள் ஆர்வம்
இதனால், கூட்டணி பேச்சு வார்த்தை வேகத்தை தே.மு.தி.க. குறைத்தது. இந்த நேரத்தில்தான், அதாவது கடந்த 9-ந் தேதி கடலூரில் தே.மு.தி.க. மாநாடு நடைபெற்றது. ஏற்கனவே, இந்த மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்ததால், தொண்டர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
ஆனால், மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "கூட்டணியை முடிவு செய்துவிட்டோம். நாம் இருக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும். ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணியை அறிவிக்காதபோது, நாம் மட்டும் ஏன் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்" என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, கூட்டணியை அறிவிக்காமல் சென்றுவிட்டார்.
மதில் மேல் பூனை
மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் அவ்வாறு பேசியிருந்தாலும், அப்போதுகூட தே.மு.தி.க. கூட்டணியை இறுதி செய்யாமலேயே இருந்து வந்தது. இப்படி, மதில் மேல் பூனையாக இருந்து வந்த தே.மு.தி.க. ஒரு வழியாக கூட்டணியை முடிவு செய்துவிட்டது.
ஆளுங்கட்சியான தி.மு.க.வுடன் முதல் முறையாக கைகோர்க்க இருக்கிறது.
2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தே.மு.தி.க., 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இருந்து போட்டியிட்டு வருகிறது. 20 ஆண்டுகள் தேர்தல் களத்தில் இருந்தாலும், இதுவரை தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது இல்லை. வரும் தேர்தலில்தான் முதல் முறையாக கூட்டணி அமைக்கிறது.
எத்தனை தொகுதிகள்?
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 6 சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தொகுதியை குறிப்பிட்டு மகன் விஜய் பிரபாகரன் போட்டியிட பிரேமலதா விஜயகாந்த் கேட்டதாகவும், அதற்கு தி.மு.க. தலைமையும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
அதாவது, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், விஜய் பிரபாகரன் எம்.எல்.ஏ.வாக தொடர்வார். தோல்வியடைந்தால் ராஜ்யசபாவுக்கு எம்.பி.யாக அனுப்ப திட்டம் இருக்கிறது. அவர் எம்.எல்.ஏ.வாகிவிட்டால், ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு பிரேமலதா விஜயகாந்தோ, அல்லது அவரது சகோதரர் எல்.கே.சுதீஷோ செல்ல வாய்ப்பு இருக்கிறது.
சாமி தரிசனம்
கூட்டணி இறுதியான நிலையில், நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற பிரேமலதா விஜயகாந்த், ஆண்டாள் கோவிலில் சாமி தரினம் செய்தார். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி இறுதியான போதும், விஜயகாந்த் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். விஜயகாந்தின் தாயார் பெயர் ஆண்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.