

சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 100 சதவீத ஓட்டுகள் பதிவாக வேண்டும் என்ற இலக்குடன் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதற்காக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும் அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
தேர்தலில் தவறாமல் அனைவரும் ஓட்டு போடவேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் இந்த உயர்ந்த செயலுக்கு, போக்குவரத்து துறை உதவ முன்வந்துள்ளது.
சென்னையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் வசித்து வருகின்றனர். அவர்களில் பலருக்கு சொந்த ஊரில் தான் ஓட்டுகள் உள்ளன. இதனால், அவர்கள் சொந்த ஊருக்கு சென்று ஓட்டு போடுவதற்கு வசதியாக 400 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஏப்ரல் 18-ந்தேதி நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 17-ந்தேதி மகாவீர் ஜெயந்தி, 19-ந்தேதி புனித வெள்ளி என்பதால், அரசு விடுமுறையாகும். இந்த 3 நாட்களுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை ஆகும்.
எனவே, இந்த விடுமுறையை பயன்படுத்தி, சென்னையில் வசிக்கும் வெளியூர்காரர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று தேர்தலில் ஓட்டு போடுவதற்கு வசதியாக சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் வழக்கமாக செல்லும் பஸ்களுடன், 400 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த 400 சிறப்பு பஸ்கள் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பாக கோயம்பேடு மற்றும் பெருங்களத்தூரில் இருந்து இயக்கப்படும். இந்த வசதியை சென்னையில் வசிக்கும் வெளியூர்காரர்கள் பயன்படுத்தி, தேர்தலில் தவறாமல் ஓட்டுப் போடும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.