

சென்னை,
பள்ளிக்கல்விக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் 5,641 வகுப்பறைகள், 5,880 கழிவறைகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக கொண்டுவரும் நோக்கில், கடந்த கால அரசுகள் காட்டிய அதே முனைப்பை தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசும் காட்டி வருகிறது. அதற்கேற்ப அரசு பள்ளிகளில் என்னென்ன உள்கட்டமைப்பு தேவைகள் இருக்கிறது? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளிடம் கேட்டு இருந்த நிலையில், அதற்கான விவரங்கள் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, உள்கட்டமைப்பு வசதிகளின் விவரங்கள் பள்ளிகளில் இருந்து பெறப்பட்டு, அதற்கு ஒரு உத்தேச செலவு பட்டியலையும் பள்ளிக்கல்வித் துறை தயாரித்திருக்கிறது.
அந்தவகையில் 2026-27-ம் ஆண்டில் வகுப்பறைகள் மட்டும் 5,641 என்ற எண்ணிக்கையில் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு வகுப்பறையின் மதிப்பு சுமார் ரூ.25.97 லட்சம் என கணக்கிடப்பட்டு, மொத்தம் சுமார் ரூ.1,465 கோடி செலவாகும் என சொல்லியுள்ளனர். அதேபோல், 3,142 எண்ணிக்கையில் மாணவர்கள் கழிவறைகளும், 2,738 எண்ணிக்கையில் மாணவிகள் கழிவறைகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 880 எண்ணிக்கையில் கழிவறை வசதிக்காக சுமார் ரூ.620 கோடி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல், சுமார் ரூ.59 கோடியில் குடிநீர் வசதி 1,340 என்ற எண்ணிக்கையில் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
மேலும் 2,361 ஆய்வகங்கள் அரசு பள்ளிகளில் தேவைப்படுவதாகவும், இதற்கு ரூ.1,598 கோடியே 24 லட்சம் வரை செலவாகும் என்றும், அரசு பள்ளி சுற்றுச்சுவர்களுக்கு என ரூ.458 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் அரசு பள்ளிகளின் இந்த உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்ய சுமார் ரூ.4,200 கோடி வரை தேவைப்படும் என பள்ளிக் கல்வித்துறை அரசிடம் தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் வெளியான பட்ஜெட் அறிவிப்பில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளின் தேவையை பள்ளிக்கல்வித்துறை எப்படி? எப்போது? பூர்த்தி செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள், பெற்றோர், கல்வியாளர்கள் இடையே எழுந்துள்ளது.