கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
Published on

சென்னை,

தீபாவளியையொட்டி தமிழக அரசு 5-ந் தேதியை (திங்கட்கிழமை) அரசு விடுமுறையாக அறிவித்ததால், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் வெளியூர் மக்கள் பெரும்பாலானோர் 2-ந் தேதி (அதாவது, நேற்று) சொந்த ஊர் செல்ல திட்டமிட்டனர்.

இதையடுத்து வெளியூர் செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, 2-ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும், 5 தற்காலிக பஸ்நிலையங்கள் செயல்பட தொடங்கும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.

அதன்படி சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் இருந்தது. நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதேபோல், தாம்பரம், ஊரப்பாக்கத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டதாலும், மற்ற வாகனங்கள் அதிகளவில் வந்ததாலும் கோயம்பேடு பஸ்நிலையம், தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக நேற்று ரெயில்களிலும் பலர் பயணம் செய்தனர். சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களான திருச்செந்தூர், கன்னியா குமரி, தூத்துக்குடி, அனந்தபுரி, ராமேஸ்வரம், நெல்லை, பொதிகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட பல ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நேற்று பிற்பகலிலும், இரவிலும் சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட்டது. அதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து சேலம், கோவை, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

ரெயில்கள் நடைமேடைக்கு வந்ததும் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளை தவிர, முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். ரெயில்வே போலீசார், முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் பயணிகளை வரிசைப்படுத்தி ஏற்றினார்கள்.

சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடாமல் இருப்பதற்காக ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com