

மேட்டூர்
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 90,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதனால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபினி அணையில் இருந்து காலையில் தமிழகத்திற்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலையில் கபினி அணையில் இருந்து மட்டும் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது கே.ஆர்.எஸ் அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவு 90, ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அண்மையில் கர்நாடகாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை விறுவிறுவென நிரம்பியது.
இதன் காரணமாக காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 25,000 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கபட்டு உள்ளது.
இதனிடையே பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 90,000 கனஅடியாக உள்ளது. ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்கள் இயக்க 32ஆவது நாளாக தடை நீடிக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம்-117.50 அடி, நீர்இருப்பு-89.53 டிஎம்சியாக உள்ளது நீர்மின் நிலையங்கள் வழியாக 22,500 கனஅடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 2,500கனஅடி நீர் திறக்கப்படுகிறது.