சேகர்பாபு முதல் விஜய் செல்வாக்கு வரை... சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தோல்விக்கான பரபரப்பு தகவல்கள்

தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக 38 பேர் அடங்கிய கள ஆய்வு குழுவை மு.க.ஸ்டாலின் அமைத்தார்.
சேகர்பாபு முதல் விஜய் செல்வாக்கு வரை... சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தோல்விக்கான பரபரப்பு தகவல்கள்
Published on

சென்னை,

கள ஆய்வு குழு

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., ஆட்சி அதிகாரத்தை இழந்தது. தேர்தல் தோல்விக்கு தி.மு.க. தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்று கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக 38 பேர் அடங்கிய கள ஆய்வு குழுவையும் நியமித்தார். மேலும் இணையதளம் வாயிலாக கருத்துகள் கேட்கப்பட்டன.

தி.மு.க. கள ஆய்வுக்குழுவினர் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், வேட்பாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களை தனித்தனியே சந்தித்து அவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

அறிக்கை சமர்ப்பிப்பு

இந்த கருத்துகேட்பு விவரங்களை அறிக்கையாக தி.மு.க. கள ஆய்வு குழுவினர் தயார் செய்துள்ளனர். அதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த 10-ம் தேதி ஆய்வுக்குழுவினர் சமர்ப்பித்தனர். அறிக்கையில் இருந்த விபரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

பல முறை காத்திருந்தும் அமைச்சர்களை பார்க்க முடியாமல் திரும்பி சென்றதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்து சமய அறநிலைய துறையில் வேண்டியவர்களுக்கு அமைச்சர் பதவி அளித்ததாக புகார். களத்தில் திமுக அரசு - திமுக கட்சி என இரண்டாக பிரிந்து நின்றது. உள்ளாட்சி பிரதிநிதிகள் கேட்கும் திட்டங்களுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை. அதிகாரிகள் அவர்களாகவே திட்டங்களை முடிவு செய்தது.

சேகர்பாபு

கூட்டுறவு சங்கம், ஆவின் உள்ளிட்ட தேர்தல்களை நடத்தாததால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஓராண்டுக்கு மேல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் சரிவர செய்ய முடியாமல் போனது. மக்கள் குறைகளை அமைச்சர்களிடம் கொண்டு செல்ல அமைச்சர்களின் உதவியாளர்களே முட்டுக்கட்டையாக இருந்தது.

கட்சியில் உள்ள இளைஞர்களின் சக்தியை முழுமையாக பயன்படுத்தவில்லை. அறநிலையத்துறை கோவில் அறங்காவலர் குழு நியமன பொறுப்புகளில் உண்மையான திமுகவினருக்கு பொறுப்பு அளிக்கவில்லை. அதிமுகவில் இருந்து வந்தவர்கள், சேகர்பாபுவுக்கு வேண்டியோருக்கு மட்டுமே பொறுப்பு வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.தற்காலிக நியமன பொறுப்புகளில் கட்சியினருக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.

விஜய் செல்வாக்கு

கட்சி பொறுப்பில் இல்லாத மூத்த நிர்வாகிகளை கண்டுகொள்வதில்லை. டெண்டர் பெரும்பாலும் திமுகவினருக்கு ஒதுக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை போதுமான எண்ணிக்கையில் கொடுக்காதது கிடைக்காத மகளிரிடம் அவநம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. .

மகளிரிடையே விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை தொண்டர்கள், கீழ்மட்ட பொறுப்புகளில் இருப்பவர்கள் எடுத்துக்கூறியும் மாவட்ட பொறுப்புகளில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com