தமிழகத்தைச் சேர்ந்த 559 பேரை சிறப்பாக கவனிக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரிகள், தனிமைப்படுத்துதல் முகாம்களில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 559 பேருக்கு சிறப்பான கவனிப்பு கொடுக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 559 பேரை சிறப்பாக கவனிக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த 559 பேர் ஆஸ்பத்திரிகளிலும், தனிமைப்படுத்துதல் முகாம்களிலும் இருக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். இவர்களில் 183 பேர் எய்ம்ஸ், ஆர்.ஜி.எஸ்.எஸ்., எல்.என்.எச்., டி.டி.யூ. உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளிலும், 376 பேர் பாதர்பூர், துவர்கா, பக்கார்வாலா மேற்கு, சுல்தான்புரி, நரேலா உள்ளிட்ட இடங்களில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாம்களிலும் உள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதிலும், தனிமைப்படுத்துதல் முகாம்களிலும் இந்த 559 பேர் குறைபாடுகளை சந்தித்து வருவதாக மாநில அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இவர்களில் சிலர் சர்க்கரை நோய் உள்பட அதுதொடர்பான சில நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்துதல் முகாம்களில் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கொடுக்கப்படுவதில்லை. கடந்த 22-ந்தேதி தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்த முகமது முஸ்தபா ஹாஜியார் மரணம் அடைந்தார்.

தனிமைப்படுத்துதல் முகாம்களில் இருப்பவர்கள் அல்லது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறைகள் மற்றும் புகார்களை டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை கமிஷனருக்கு தெரிவிக்கின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள், குறைகளை நிவர்த்தி செய்வதற்காக டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளின் கவனத்துக்கோ தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை கமிஷனர் கொண்டு செல்கிறார்.

எனவே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருப்பவர்களுக்கு சிறப்பான கவனிப்பு கொடுக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீங்கள் உத்தரவிடவேண்டும். மேலும் சர்க்கரை நோய் மற்றும் அதுதொடர்பான நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கும் அறிவுறுத்தவேண்டும். ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளது. எனவே சரியான நேரத்துக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குமாறு அதிகாரிகளை நீங்கள் கேட்டுக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com