கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்

கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
Published on

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டு (2020-21) முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் வாயிலாகவே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. நோய்த்தொற்று குறையாத காரணத்தால், 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரும் கடந்த கல்வியாண்டில் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சிபெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது.

இதில் பொதுத்தேர்வை எழுத இருந்த மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது தணிந்துவந்தாலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு குறையவில்லை. எனவே, கடந்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை போலவே நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே தொடங்கப்பட உள்ளன.

சில தனியார் பள்ளிகளில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரையில், கடந்த கல்வியாண்டில் கல்வி தொலைக்காட்சி மூலமும், அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் சிலரால் வாட்ஸ்-அப் மூலமும் மாணவர்களுக்கான பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

அதேபோல் இந்த ஆண்டும் கல்வி தொலைக்காட்சி மூலமாக இன்று (சனிக்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி அலுவலகத்தில் இதற்கான பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்பட உள்ளன. அதற்கான அட்டவணையும் இன்று வெளியிடப்படுகிறது.

வகுப்புகள் நடத்தப்படும்போது மாணவர்கள் அதை புரிந்துகொள்வதற்கு பாடப்புத்தகங்கள் அவசியம். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்தப் பள்ளிகள் சார்பில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com