கோவில்பட்டியில் பழ வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல்: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது

கோவில்பட்டி வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த பழ வியாபாரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முதியவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வீரவாஞ்சிநகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சேர்மதுரை மகன் மாரித்துரை (வயது 33). இவர் கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் மாநில வணிகவரி அலுவலகம் அருகே பழ வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கும் வீரவாஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் ஜெயராஜ் (62) என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயராஜ் உள்பட 5 பேர் மாரித்துரையை அவதூறாக பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த மாரித்துரை, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயராஜ், அவரது மனைவி மல்லிகா (55), கயத்தாறு ஜே.ஜே. நகரைச் சேர்ந்த தங்கத்துரை மகன் சந்தனசெல்வம் (25), தங்கத்துரை மனைவி ஆரோக்கியமேரி (45) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.






