

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கடந்த 11 மாத காலங்களில் தமிழகத்தில் பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சமீபத்தில் நடிகர் சூர்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த பிரபலங்கள் வரிசையில் உலக தமிழர் பேரமைப்பு நிறுவன தலைவர் பழ.நெடுமாறனும் தற்போது இணைந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து பழ.நெடுமாறனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவுகள் நேற்று வந்தது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பழ.நெடுமாறன் நேற்று சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.