காதல் தோல்வியால் விரக்தி... விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பட்டதாரி வாலிபர்

சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காதல் தோல்வியால் விரக்தி... விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பட்டதாரி வாலிபர்
Published on

சென்னை,

இண்டிகோ விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு கடந்த 18-ம் தேதி இரவு 8.45 மணியளவில் இ-மெயில் வாயிலாக தகவல் ஒன்று வந்தது. அந்த இ-மெயிலில், சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வெடிகுண்டு இரவு 9.45 மணிக்கு வெடிக்கும் என்றும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உடனடியாக, இந்த தகவல் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த விமானத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது மிரட்டல் தகவல் என்றும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ விமானத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் தகவல் அனுப்பப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, பிரசன்னா (வயது 27) என்ற வாலிபரை நேற்று கைது செய்தனர். பி.காம் பட்டதாரியான இவர் வேலை தேடி வந்தார். இவரது தந்தை வெங்கட்ராமன் ஓய்வுபெற்ற தபால் அதிகாரி.

சென்னை பெரம்பூரில் உள்ள உறவுப்பெண்ணை பிரசன்னா காதலித்ததாக தெரிகிறது. அந்த பெண் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையொட்டி, பிரசன்னா தான் காதலித்த பெண்ணின் குடும்பத்தார் மீது கோபப்பட்டு, அவர்களை போலீசில் மாட்டி விடுவதற்காக, அவர்களின் பெயரை பயன்படுத்தி வெடிகுண்டு மிரட்டலில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் பிரசன்னா இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.

திருவையாறில் கைது செய்யப்பட்டு, நேற்று சென்னை அழைத்து வரப்பட்ட பிரசன்னா, தீவிர விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது போல் மிரட்டலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com