திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் விரக்தி.. பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு

சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து போலீஸ் பிரிவில் போலீசாக அவர் பணியாற்றி வந்தார்.
பெரம்பூர்,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அழகேசன். இவரது மகள் சுமதி (வயது 30). இவர், 2017-ம் ஆண்டு தமிழக போலீஸ் வேலைக்கு சேர்ந்தார். தற்போது சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து போலீஸ் பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தார்.
சுமதி, செம்பியம் போலீஸ் குடியிருப்பில் மற்றொரு பெண் போலீசான ஜெயலட்சுமி என்பவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் சுமதி பணி முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் இரவில் ஜெயலட்சுமி உடன் வீட்டின் படுக்கை அறையில் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தார்.
பின்னர் சுமதி, துணிகளை காயப்போட்டு விட்டு வருகிறேன் என கூறிவிட்டு படுக்கை அறையில் இருந்து வெளியில் சென்றார். நீண்டநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த ஜெயலட்சுமி படுக்கை அறையில் இருந்து வெளியில் வந்து பார்த்தார்.
அப்போது வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் சுமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த செம்பியம் போலீசார், சுமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் போலீஸ் சுமதிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் சுமதிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. எனினும் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி, விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






