

கொள்ளிடம்,
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் வாணிய தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி வள்ளி (59). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் காமராஜ் தனது மனைவி வள்ளியுடன் புத்தூரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இரு மகன்கள் இருந்தும் தனியாக வசித்து வந்ததால் காமராஜும், வள்ளியும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று இரவு காமராஜும், வள்ளியும் விஷம் குடித்துள்ளனர். தாங்கள் விஷம் குடித்ததை சென்னையில் உள்ள மகன்களிடம் செல்போன் மூலம் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மகன்கள் உடனடியாக சென்னையில் இருந்து புறப்பட்டு புத்தூருக்கு வந்து வீட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தந்தை காமராஜ், தாய் வள்ளி ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி காலையில் வள்ளியும், மாலையில் காமராஜும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.