

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள அலகானத்தம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (69 வயது). திமுக நிர்வாகி. இவரது மனைவி ஈஸ்வரி உடல்நலக்குறைவால் கடந்த 3-ந்தேதி இறந்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார். மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்ததை கருணாநிதியால் தாங்க முடியவில்லை. இதையடுத்து அவரை மகனும், மகள்களும் தேற்றினர். இருந்தாலும் மனமுடைந்து விரக்தியில் காணப்பட்ட கருணாநிதி நேற்று வீட்டின் கழிவறையில் உள்ள கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கருணாநிதி தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.