பணி நிரந்தரம் செய்யப்படாததால் விரக்தி: மாநகராட்சி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

பணி நிரந்தரம் செய்யப்படாததால் ஏற்பட்ட விரக்தியில் சென்னை மாநகராட்சி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பணி நிரந்தரம் செய்யப்படாததால் விரக்தி: மாநகராட்சி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சென்னை,

சென்னையை அடுத்த பல்லாவரம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (41 வயது). சென்னை மாநகராட்சி மண்டலம் 12-ல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்தார். மாதம் சுமார் ரூ.20 ஆயிரம் ஊதியம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் மற்றும் வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சாமுவேல், பலரிடம் அதிகளவில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், பல ஆண்டுகளாக பணியாற்றியும் தனது பணி, நிரந்தரம் செய்யப்படாததால் மனவேதனையில் இருந்து வந்தார். இதுபற்றி அவரது குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்களிடம் கூறி வேதனைப்பட்டு உள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் சாமுவேல், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சாமுவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தற்கொலைக்கு முன்னதாக சாமுவேல் பதிவு செய்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியில் பணியாற்றியும் பணி நிரந்தரம் செய்யப்படாதது. அதிகரித்த கடன் சுமை மற்றும் கடன் வழங்கியவர்களின் தொடர் நெருக்கடி காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

மேலும், தனது மரணத்துக்கு பிறகு தனது மனைவி மற்றும் குழந்தைகளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், தனது குடும்பத்தினருக்கு கடன் கொடுத்தவர்கள் எந்தவிதமான அழுத்தமும் கொடுக்க வேண்டாம் என்றும் கண்ணீர் மல்க உருக்கமாக வேண்டுகோள் விடுப்பதுபோல் வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com