இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு; இந்தியாவிடம் இருந்து பெட்ரோல்-டீசல் வாங்க நடவடிக்கை

இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வாரத்துக்கு 3 நாட்கள் தபால் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தபால் துறை அறிவித்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு; இந்தியாவிடம் இருந்து பெட்ரோல்-டீசல் வாங்க நடவடிக்கை
Published on

கொழும்பு,

இலங்கை சந்தித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியும், அன்னிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையும் அந்த நாட்டை பெரும் சிக்கலில் ஆழ்த்தி உள்ளது. அன்னிய செலாவணி இல்லாததால் எரிபொருள் இறக்குமதி செய்ய முடியவில்லை.

இதனால் இலங்கை அரசு பெட்ரோலிய நிறுவனமான சிலோன் பெட்ரோல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான விற்பனை நிலையங்களில் பெட்ரோல்-டீசல் போதிய அளவு இருப்பு இல்லை. இதனால் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக டோக்கன் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

மேலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் பல்வேறு சேவைகள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2 வாரங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கிறது. அலுவலக ஊழியர்களையும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. வாரந்தோறும் 3 நாட்களுக்கு தபால் சேவை ரத்து செய்யப்படுவதாக தபால் துறை அறிவித்து இருக்கிறது.

நாட்டையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அரபு நாடுகள் மற்றும் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல ரஷிய அதிபர் புதினை தொடர்பு கொண்டு பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக பேசினார்.

இது ஒருபுறம் இருக்க, 40 ஆயிரம் டன் வீதம் 4 தொகுப்பு எரிபொருள் வாங்குவதற்காக இலங்கை அரசு இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சர்வதேச சந்தையில் பெருமளவில் மொத்தமாக எரிபொருள் இறக்குமதி செய்வதால், கவர்ச்சிகரமான தள்ளுபடியை இந்தியா பெற்று வருகிறது. இதைப்போன்ற தள்ளுபடி பெறுவதற்காக ரொக்கப்பணம் செலுத்தி இந்த பெட்ரோல்-டீசலை வாங்கவும் முடிவு செய்துள்ளது.

இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெய்ரீஸ் தெரிவித்த இந்த யோசனைப்படி, இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்தா மரகோடா இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். எரிபொருள் இறக்குமதிக்காக 700 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்கனவே இந்தியாவிடம் கடன் வாங்கியுள்ள இலங்கை அரசு, மேலும் 500 மில்லியன் டாலர் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது. இந்த சூழலில் இந்த ரொக்க பரிவர்த்தனை மூலமான எரிபொருள் வாங்குவதற்காக பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com