மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிடுக! - நயினார் நாகேந்திரன்

போராட்டம் தொடர்ந்தால், தமிழகத்தின் மின்கட்டமைப்பு முற்றிலும் சிதையும் அபாயம் உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழக மின்சார வாரியத்தின் முதுகெலும்பாக விளங்கும் கேங்மேன் உள்ளிட்ட ஊழியர்கள், பணி உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரசு தொடர்ந்து அலட்சியம் செய்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேசக்கூட முதல்-அமைச்சர் விஜய்க்கோ அல்லது மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கோ நேரமில்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

ஊழியர்கள் போராட்டம்

ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் பொதுமக்களும், சிறு, குறு தொழில்துறையினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இத்தகைய சூழலில், மின்வாரிய ஊழியர்களின் இந்தப் போராட்டம் தொடர்ந்தால், தமிழகத்தின் மின்கட்டமைப்பு முற்றிலும் சிதையும் அபாயம் உள்ளது.

எனவே, ஜோசப் விஜய்யின் அரசு உடனடியாக மின் ஊழியர் சங்கங்களுடன் சுமுகமான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன். மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உறுதிசெய்ய வேண்டுமானால், முதலில் அந்தத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களின் மனக்குறையைப் போக்க வேண்டும். மக்களின் அன்றாடத் தேவையைப் பாதிக்கும் மின்சாரப் பிரச்சினையில் மெத்தனப்போக்கை விடுத்து, காலதாமதமின்றி உரிய தீர்வை எட்ட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com