

இந்தியாவை தனது இரண்டாவது அலையால் தாக்கி வரும் கொரோனா வைரஸ், தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை.
பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம்
நாட்டில் கொரோனா பாதிப்பு தினமும் உயர்ந்து வருகிற 10 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது போன்று, இரண்டாவது அலையையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.
முழு ஊரடங்கு
எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் தமிழக அரசு கடந்த 18-ந்தேதி அறிவித்தது. அதன்படி 7 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் நேற்று முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் நேற்று வெறிச்சோடியது.
சென்னையில்ஓய்வு எடுத்த சாலைகள்
தலைநகர் சென்னையில் அண்ணா மேம்பாலம் தொடங்கி அனைத்து மேம்பாலங்களும், சாலைகளும் வாகன போக்குவரத்து முடங்கியதால் ஓய்வு எடுத்தன.குறிப்பாக எப்போதும் பரபரப்பாக இயங்கியே பழக்கப்பட்ட அண்ணா சாலை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை, மெரினா காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, ராஜாஜி சாலை, கிண்டி சர்தார் படேல் சாலை, அடையாறு எல்.பி. சாலை, ஓ.எம்.ஆர் என அழைக்கப்படுகிற பழைய மகாபலிபுரம் சாலை (ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலை), இ.சி.ஆர். என்னும் கிழக்கு கடற்கரை சாலை உட்பட நகரின் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து முடங்கியது. பெரும்பாலான சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன.எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள், இணைப்பு சாலைகளும் மூடப்பட்டன. மேம்பாலங்கள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன.
கடைகள் அடைப்பு
அதேபோல நகரில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, பெரம்பூர், அண்ணாநகர் உள்பட கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் காணப்படும் தியாகராயநகர் ரங்கநாதன் தெரு நேற்று ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மருந்தகங்கள், பாலகங்கள் தவிர அனைத்து கடைகளும் நேற்று முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள், அழகு சாதன நிலையங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள், பெரிய அரங்குகள்,
கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் அனைத்துமே மூடப்பட்டிருந்தன. அந்த வகையில் டீக்கடைகள் முதல் வணிக வளாகங்கள் வரை எதுவுமே செயல்படவில்லை.
வழிபாட்டு தலங்கள் மூடல்
முழு ஊரடங்கு காரணமாக சாலைகளில் பஸ்கள் செல்லவில்லை. பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. முழு ஊரடங்கையொட்டி கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனாலும் உரிய நடைமுறைகளை பின்பற்றி வழிபாடுகள் மட்டும் நடத்தப்பட்டன.திருமண மண்டபங்களிலும் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வும் மேற்கொண்டனர்.மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு காட்சி
அளித்தன. ஏற்கனவே பொதுமக்கள் உஷாராக நேற்றைய தினமே தேவையான இறைச்சி மற்றும் காய்கறி உள்ளிட்டவற்றை வாங்கி வைத்துவிட்டார்கள். இதனால் பொதுமக்கள் பெரியளவில் பாதிப்பை சந்திக்கவில்லை. இதேபோன்று மதுபானப்பிரியர்கள் நேற்று முன்தினமே தங்கள் விருப்ப மதுபானங்களை வாங்கிச் சென்று விட்டனர்.
போலீசார்தீவிர கண்காணிப்பு
சாலைகளில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைகள் இன்றியோ, உரிய ஆவணங்கள் இன்றியோ ஊர் சுற்றிய வாகன ஓட்டிகளை போலீசார் வழிமறித்து அபராதம் விதித்தனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வாகனங்களிலும் போலீசார் ரோந்து சென்று சாலைகளில் தேவையில்லாமல் கூட்டம் கூட்டமாக நிற்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.திருமணங்களுக்கு செல்வதாக கூறி செல்வோரிடம் திருமண அழைப்பிதழை வாங்கி பரிசோதித்த பின்னரே போலீசார் அனுமதித்தனர்.அதேபோல மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவாறு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். சென்னையின் நகர்ப்புறங்கள் போலவே புறநகர் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பிற நகரங்களும் வெறிச்சோடின
சுற்றுலாப்பயணிகளைகவரும் மாமல்லபுரம் நேற்று சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடியது. புகழ் பெற்ற சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்டவை நேற்று சுற்றுலா பயணிகள் இல்லாமல், ஆள் அரவமின்றி அமைதியாக காட்சி அளித்தன.தொழில் நகரங்களான கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர் ஆகியவற்றிலும் முழு ஊரடங்கால் பரபரப்பான வாழ்க்கை ஓய்வு எடுத்துக்கொண்டது.முக்கிய நகரங்களான காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருச்சி, சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தஞ்சை, கும்பகோணம், திருநெல்வேலி, தென்காசி, திருச்செந்தூர் ஆகியவற்றிலும் முழு அடைப்பு காரணமாக சாலைகள் வெறிச்சோடின. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.முழு ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய மக்களுக்கு, ஞாயிற்றுக் கிழமையையொட்டி டி.வி. சானல்கள் ஒளிபரப்பிய திரைப்படங்களும், பிற நிகழ்ச்சிகளும் பொழுதுபோக துணை நின்றன.
அத்தியாவசிய பணிகள்
ஆஸ்பத்திரிகள், மருந்துக்கடைகள், பாலகங்கள், பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு, முழு அடைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவை வழக்கம்போல இயங்கின.