

சென்னை,
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது என்பதும், பஸ் போக்குவரத்துகள் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பணிகள் மட்டும் நடைபெற அரசு அனுமதி அளித்துள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் செல்வதற்கு ஏதுவாக தெற்கு ரெயில்வே சார்பில் குறைந்த அளவு மின்சார ரெயில் சேவைகள் மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
343 சேவை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னையில் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாளை சென்னை சென்டிரல்-அரக்கோணம் பிரிவில் 113 ரெயில் சேவைகளும், சென்டிரல்-கும்மிடிப்பூண்டி பிரிவில் 60 சேவைகளும், சென்னை கடற்கரை-வேளச்சேரி பிரிவில் 36 சேவைகளும், கடற்கரை-செங்கல்பட்டு பிரிவில் 120 சேவைகளும், ஆவடி-பட்டாபிராம் ராணுவ சைடிங் பிரிவில் 4 சேவைகளும், பட்டாபிராம்-பட்டாபிராம் ராணுவ சைடிங் பிரிவில் 10 சேவைகளும் என மொத்தம் 343 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும்.
இதைப்போல் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து முன்பதிவு டிக்கெட் கவுன்ட்டர்களும் செயல்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.