

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் குழுவுடனும் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலான முழு ஊரடங்கு காலம் முடிய இருக்கிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால், குறைந்துள்ளதே தவிர கட்டுக்குள் இன்னும் வரவில்லை என்றேதான் சொல்ல முடியும். முழு ஊரடங்கு பிறப்பிக்கும் போது பொதுமக்களின் நன்மைக்காக சில தளர்வுகளை நாம் அறிவிக்கிறோம். தேவையான மளிகை, காய்கறிகளை வாங்கிக் கொள்வதற்காக மட்டுமே அந்தத் தளர்வுகளை அறிவித்தோம்.
ஆனால் அந்தத் தளர்வுகளைப் பயன்படுத்தி அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவதும் சிலருக்கு வழக்கம் ஆகிவிட்டது. இப்படி வருபவர்களை அறிவுரை சொல்லி அனுப்பி வையுங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டோம். அத்தகைய அன்பான அறிவுரைகளையும் சிலர் கேட்பதாகத் தெரியவில்லை. முழு ஊரடங்கு என்பது பொதுமக்களின் நன்மைக்காகத்தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர்களைக் காக்கவே, பாதுகாக்கவே போடப்பட்டுள்ளது. அதனை உணராதவர்களாக பொதுமக்களில் சிலர் இருப்பது வேதனை தருகிறது.
முழு ஊரடங்கை சிலர், ஏதோ விடுமுறைக் காலம் என்பதாக நினைத்து ஊர் சுற்றி வருகிறார்கள். இது விடுமுறைக் காலம் அல்ல, கொரோனா காலம் என்பதை உணராமல் இன்னமும் சிலர் இருக்கிறார்கள். கொரோனாவை வாங்கிக் கொள்ளவும் மாட்டேன், கொரோனாவை அடுத்தவருக்கு கொடுக்கவும் மாட்டேன் என்று பொதுமக்கள் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டும்தான் இந்த நோய்த்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்தினால் தான் கொரோனா கட்டுக்குள் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்கு சட்டமன்ற கட்சிகளின் எம்எல்ஏக்கள் குழுவினர் தங்களது கருத்துக்களை தெரிந்து தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முழு ஊரடங்கு அவசியம். பால், காய்கறி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி தரவேண்டும். நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று பொருட்களை வழங்க வேண்டும். சி.டி.ஸ்கேன் அதிகம் செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் வலியுறுத்தினார்.
அதேபோல் பாமக தலைவர் ஜிகே மணி, 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் சிடி ஸ்கேனுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.