

மதுரை,
கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் 3-வது வாரமாக ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகள் தவிர பிற காரணங்களுக்கு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமண நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திக் கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்பவர்கள், போலீசார் நடத்தும் வாகன சோதனையின் போது திருமண அழைப்பிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் ஊரடங்கு காரணமாக கோவில்கள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவில்களில் திருமணம் நடத்த திட்டமிட்டவர்கள், கோவில் வாசல்களிலேயே திருமணத்தை நடத்தினர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று அடைக்கப்பட்டிருந்த நிலையில், வாசலில் நின்றவாறு திருமண ஜோடிகள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதில் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.