பயிர்க்கடன் நிலுவையை நவம்பர் 30-க்குள் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில் இருந்து முழு தள்ளுபடி

நடப்பாண்டில் இதுவரை 5,70,942 விவசாயிகளுக்கு ரூ.5,190 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயிர்க்கடன் நிலுவையை நவம்பர் 30-க்குள் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில் இருந்து முழு தள்ளுபடி
Published on: 

சென்னை,

பயிர்க்கடன் தள்ளுபடி பெற்று, தள்ளுபடி தொகை போக எஞ்சியுள்ள நிலுவைக் கடனை வரும் 30-ஆம் தேதிக்குள் (30.11.2026) திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு, வட்டியிலிருந்து முழு தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அரசாணை வெளியீடு

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அரசாணை (நிலை எண். 89, நாள் 06.11.2026) அடிப்படையில் இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன்படி, பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் தங்களது தள்ளுபடி தொகை நீங்கலாக, எஞ்சியுள்ள நிலுவை கடன் தொகையை நவம்பர் 30-க்குள் நேர் செய்து, புதிய பயிர்க்கடன்களை பெற்றுக்கொள்ளலாம். நடப்பாண்டில் இதுவரை 5,70,942 விவசாயிகளுக்கு ரூ.5,190 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை நாட்களிலும் இயங்கும்

விவசாயிகளின் வசதிக்காக, வரும் 28.11.2026 (சனிக்கிழமை) மற்றும் 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய விடுமுறை நாட்களிலும் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் வழக்கம்போல் செயல்படும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிலுவை தொகையை செலுத்தி, முழு வட்டி தள்ளுபடியுடன் புதிய பயிர்க்கடன்களை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு எண்கள்

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 98400 65423 என்ற வாட்ஸ்அப் உதவி எண் மூலமாகவும் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X