நாவலர் நெடுஞ்செழியனுக்கு முழு உருவ வெண்கல சிலை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாவலர் நெடுஞ்செழியனுக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும், அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாவலர் நெடுஞ்செழியனுக்கு முழு உருவ வெண்கல சிலை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

சென்னையில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும், அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. அரசு, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், நமது மாநிலம் மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களையும், சிறப்புகளையும், வருங்கால சந்ததியினர் அறியது கொள்ளும் வகையிலும், மணிமண்டபங்கள், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், உருவச் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை உருவாக்கி, அவற்றை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றது.

பேரறிஞர் அண்ணாவின் அன்பிற்கு பாத்திரமானவரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களின் ஒருவரும், தமிழ்நாடு அரசில் நீண்ட காலமாக அமைச்சராகவும் பணியாற்றிய நாவலர் இரா.நெடுஞ்செழியன், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் 11.7.1920ல் பிறந்தார். சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். தனது மாணவர் பருவத்திலேயே சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டார். எழுத்தாளர், இதழாளர், அரசியல் வல்லுநர், கருத்துவன்மையோடும், நகைச்சுவையோடும் பேசும் சிறந்த சொற்பொழிவாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாவலரின் பேச்சுத் திறனைக்கேட்டு வியந்த பெரியார், நாவலரை தன் சுற்றுப் பயணத்திற்கு அழைத்துச் சென்றார்.

பேரறிஞர் அண்ணா தி.மு.க.வை தொடங்கியபோது, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும், பின்னர் பொதுச் செயலாளராகவும் சிறப்பாக பணியாற்றினார். பேரறிஞர் அண்ணாவால், தம்பி வா! தலைமையேற்க வா! ஆணையிடு, கட்டுப்படுகிறோம் என்று வாயாற புகழப்பட்ட பெருமைக்குரியவர் நாவலர் இரா.நெடுஞ்செழியன். பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் கல்வி மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். 1977-ல் அ.தி.மு.க.வில் இணைந்தபின், அக்கட்சின் அவைத்தலைவராகவும், பின்னர் பொதுச் செயலாளராகவும், திறம்பட பணியாற்றியவர். மேலும் தனது இறுதி மூச்சு வரை அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி, எம்.ஜி.ஆரின் அமைச்சரவையிலும், ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் நிதித்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணா மறைந்தபோதும், எம்.ஜி.ஆர். மறைந்தபோதும், இடைக்கால முதல்-அமைச்சராக பதவி வகித்த சிறப்புக்குரியவர். இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட நாவலர் இரா.நெடுஞ்செழியனை சிறப்பிக்கும் வகையில், அன்னாருக்கு சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்பதையும், அவரது பிறந்த தினமான ஜூலை 11-ம் நாளை (அதாவது இன்று) அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com