

அரியலூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பார்பனசேரி கிராமத்தை சேர்ந்தவர் அன்னப்பட்டு (வயது 45). இவர் தனது கணவரை பிரிந்து பார்பனசேரி கிராமத்திலேயே கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்தார். மேலும் கடந்த 12 ஆண்டுகளாக வாரணாசி சமத்துவபுரத்தில் உள்ள பாலாஜி என்பவருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார்.
தினமும் காலை 10 மணியளவில் வயலுக்கு சென்றுவிட்டு மாலை 5 மணியளவில் தனது வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினமும் வழக்கம் போல் வயலுக்கு சென்றவர் மாலை மீண்டும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் விக்னேஷ் சோளக்காட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தலையில் ரத்தக்காயங்களுடன் அன்னப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் அன்னப்பட்டுவை கொலை செய்ததாக திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழையூர் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் பாலமுருகனை (33) போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தனியார் சிமெண்டு ஆலையில் லேப் உதவி அலுவலராக பணியாற்றி வரும் பாலமுருகனுக்கும், அன்னப்பட்டுவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் அரியலூர் சென்று விட்டு திரும்பி வரும் வழியில் அன்னப்பட்டுவுக்கு போன் செய்த பாலமுருகன் மதியம் 1.30 மணியளவில் சோளக்காட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் அங்கிருந்த அரிவாளால் அன்னப்பட்டுவின் பின் தலையில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்துள்ளார். பின்னர் அங்கிருந்த தொட்டியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து ரத்தத்தை கழுவிவிட்டு பாலமுருகன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து, பாலமுருகனை அரியலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.