பாப்பாரப்பட்டியில்மண்டல அளவிலான சிறுதானிய திருவிழாஅமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

பாப்பாரப்பட்டியில்மண்டல அளவிலான சிறுதானிய திருவிழாஅமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
Published on

பாப்பாரப்பட்டியில் மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா மற்றும் கண்காட்சியினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

சிறுதானிய திருவிழா

சர்வதேச சிறுதானிய ஆண்டு- 2023-ஐ முன்னிட்டு தர்மபுரி மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா மற்றும் கண்காட்சி தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்க கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார்.கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் துணைவேந்தர் கீதாலட்சுமி, எம்.எல்.ஏக்கள் ஜி.கே. மணி, வெங்கடேஸ்வரன், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில்வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறுதானிய திருவிழா மற்றும் சிறுதானிய கண்காட்சியை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் சிறுதானியங்கள் சராசரியாக 8.67 லட்சம் ஏக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசின் சீரிய திட்டங்களினால் சிறுதானிய உற்பத்தி திறன் வெகுவாக உயர்ந்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை 2023 - ஆம் ஆண்டினை "சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு" என அறிவித்துள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டில் தர்மபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் சிறுதானிய மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டு சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறுதானியகளை நமது அன்றாட வாழ்வில் உணவு பொருளாக தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் நமது உடல் நலன் மேம்படுகின்றது.

ராகி கொள்முதல்

தர்மபுரி மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பான 2 லட்சத்து 48 ஆயிரத்து 400 ஹெக்டேர் பரப்பில், சோளம், கம்பு ராகி, வரகு, சாமை மற்றும் தினை ஆகிய சிறு தானியங்கள் மட்டும் சாரசரியாக 53 ஆயிரத்து 700 ஹெக்டேர் பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் உற்பத்தியை அதிகரித்து மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட விவசாயிகளிடம் தருமபுரி, அரூர் மற்றும் பென்னாகரம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் மூலம் ராகி ஒரு கிலோ ரூ.35.78/-க்கு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து பொது விநியோக திட்டத்தின் கீழ் 2 கிலோ அரசிக்கு பதிலாக 2 கிலோ ராகி தர்மபுரி மற்றும் உதகை ஆகிய மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி மைய இயக்குநர் ஷேய்க் மீரா, தேசிய வேளாண் பூச்சிகள் தகவமைப்பு மைய இயக்குநர் சுசீல், வேளாண்மைப் பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர் முருகன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

--

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com