சீமைக் கருவேல மரங்களை அகற்ற நிதியை விடுவிக்க வேண்டும் - வைகோ தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

விதிகளை காரணம் காட்டி நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற நிதியை விடுவிக்க வேண்டும் - வைகோ தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சீமைக் மரங்களை அகற்றுவதற்கான பணிக்காக மாவட்ட கனிம நிதியை பயன்படுத்த வேண்டும். அதற்காக கனிம நிதியில் இருந்து ரூ.5 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார், நீதிபதி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில அறிக்கை தாக்கல் செய்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், “சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு கனிம நிதியை விடுவிப்பது தொடர்பாக மாவட்ட குழுக்களுடைய ஒப்புதலை பெற்று நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிதியின் பயன்பாடு தொடர்பாக சில கட்டுப்பாடுகள் உள்ளதால், நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த வைகோ தனது தரப்பு வாதத்தின்போது, “சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டுக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஐகோர்ட்டின் உத்தரவுகள் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சீமைக் கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியை பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தடையும் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. அதனால் விதிகளை காரணம் காட்டி நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 9-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com