கொடிநாள் நிதி வசூலில் முதலிடம் பிடித்த ககன்தீப் சிங் பேடிக்கு விருது

கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கொடிநாள் வசூலில் முதலிடம் பிடித்த பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் விருது வழங்கி கவுரவித்தார்.
கொடிநாள் நிதி வசூலில் முதலிடம் பிடித்த ககன்தீப் சிங் பேடிக்கு விருது
Published on

சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி

சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். கவர்னரின் மனைவி புஷ்பா தேவி புரோகித், சபாநாயகர் அப்பாவு, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொடிநாள் வசூல் சாதனை விருது

விழாவில் கொடிநாள் வசூலில் சாதனை படைத்த கலெக்டர்கள் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் (திருவள்ளூர்), எஸ்.சிவராசு (திருச்சி), டாக்டர் ஜெ.விஜயராணி (சென்னை) மற்றும் சதவீத அடிப்படையில் அதிகமாக கொடிநாள் வசூல் செய்த கலெக்டர்கள் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் (திருவள்ளூர்), மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் (காஞ்சீபுரம்), பி.காயத்திரி கிருஷ்ணன் (திருவாரூர்), அதிக கொடிநாள் வசூல் செய்த மாநகராட்சி கமிஷனராக சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, ஈரோடு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் எம்.இளங்கோவன் ஆகியோருக்கு கவர்னர் விருது வழங்கி கவுரவித்தார்.

கவர்னர் பேச்சு

விருது பெற்றவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

செழுமையான பண்பாடு, பழமையான மொழி மற்றும் நட்பு பாராட்டும் மக்களின் உறைவிடமாகத் தமிழகம் திகழ்கிறது. சிறப்பான உள்கட்டமைப்பையும், திறன்மிகு பணிச் சூழலையும் இம்மாநிலம் பெற்றுள்ளது. மாநில அரசின் அயராத முயற்சிகளின் காரணமாக, தமிழகம் பல துறைகளில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளது. அனைவரும் முழு வெளிப்படைத்தன்மையுடன் கடினமாக உழைக்க வேண்டும். அத்துடன் மக்களுக்கு ஊழல் இல்லாத நிர்வாகத்தை வழங்குவதுடன், அனைத்துத் துறைகளிலும் மாநிலத்தை முதலிடத்துக்கு கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பவானி தேவியையும், ஏனைய ஒலிம்பிக் வீரர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

சுதந்திர தின குறும்படம்

முன்னதாக கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மற்றும் பிற நாடுகளின் துணைத் தூதர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நடிகை ஷோபனாவின் குழுவினரின் நடன நிகழ்ச்சியும், லால்குடி ஜெயராமன் மகன் ஜி.ஜெ.ஆர்.கிருஷ்ணன் மற்றும் லால்குடி விஜயலட்சுமி வயலின் மற்றும் கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடந்தன. தொடர்ந்து, சும்மாவா வந்தது சுதந்திரம்? என்ற குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com