சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு பணிகள் குறித்து ககன்தீப் சிங் பேடி ஆய்வு

பயணிகள் எளிதாக பயன்படுத்தக்கூடிய சென்னையை உருவாக்கும் நோக்கில், இந்த திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.
ககன்தீப் சிங் பேடி
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் பூந்தமல்லி சாலை எழும்பூர் சிக்னல் அருகில் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (Intelligent Transport System - ITS) செயலாக்கப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு திட்டம் :-

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (Intelligent Transport System - ITS) திட்டம், சென்னை பெருநகரப் பகுதியில் நகர்ப்புறப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறது. ரூ. 530 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், மேம்பட்ட நுண்ணறிவு போக்குவரத்து தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி போக்குவரத்து மேலாண்மையை வலுப்படுத்துதல், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயமாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரண்டு முக்கிய கூறுகள்

1) பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறைக்கான (GCTP), போக்குவரத்து தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு (TIMS)

2) மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கான (MTC), நகரப் பேருந்து அமைப்பு (City Bus System - CBS)

செயல்படுத்தப்பட்டு வரும் அமைப்புகள்

அமைப்பு - எண்ணிக்கை

1. போக்குவரத்து நிலைமைக்கு ஏற்ப செயல்படும் சிக்னல் (ATCS) 165

2. சிவப்பு விளக்கு மீறல் கண்டறிதல் அமைப்பு (RLVD)\ 50

3. வேக வரம்பு மீறல் கண்டறிதல் அமைப்பு (SLVD) 10

4. போக்குவரத்து சம்பவம் கண்டறிதல் அமைப்பு (TIDS) 58

5. போக்குவரத்து நெரிசலை அறிய உதவும் தானியங்கி வாகன எண்ணிக்கை மற்றும் வகைப்பாடு கருவி (ATCC) 115

6. பெருநகர சென்னை போக்குவரத்து காவல் துறையின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (TIMS) - GCTP 1

7. போக்குவரத்து நிலவரம் குறித்த தகவல்களை வழங்கும் தகவல் பலகைகள் (VMS) 13

8. MTC கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 1

9. பேருந்துகளின் இருப்பிடத்தைக் கண்டறிய பேருந்துகளில் பொருத்தப்படும் உபகரணங்கள் (AVLS) 3,500 பேருந்துகள்

10. பேருந்துகளின் வருகை நேரத்தைக் காட்டும் பயணிகள் தகவல் பலகைகள் 616 (PIS)

11. பேருந்து பணிமனை செயல்பாடுகளை மேம்படுத்தும் பணிமனை மேலாண்மை அமைப்பு (DMS) 32

நேரில் ஆய்வு

சென்னையின் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் திட்டப் பணிகள் சீராக முன்னேறி வருகின்றன. தகவல் தொடர்பு நெட்வொர்க் உள்கட்டமைப்பிற்கான தேவையான அனுமதிகள் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையால் வழங்கப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்ட இடங்களில் மின் இணைப்புகள் பெறப்பட்டு வருகின்றன. மேலும், நுண்ணறிவு போக்குவரத்து உள்கட்டமைப்பை நிறுவுவதற்குத் தேவையான சந்திப்பு (Junction) மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை ITS திட்டத்தின் அனைத்து முக்கிய கூறுகளும் வருகின்ற ஆகஸ்ட் 2026-க்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வர கூடுதல் தலைமைச் செயலாளர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பின்: பயண நேரம் மற்றும் காத்திருப்பு நேரம் குறையும், போக்குவரத்து ஓட்டம் சீரடையும், தானியங்கி விதிமுறை அமலாக்கம் மூலம் சாலைப் பாதுகாப்பு மேம்படும், பொதுப் போக்குவரத்து சேவைகளின் நம்பகத்தன்மை அதிகரிக்கும், நகர்ப்புற போக்குவரத்து மேலாண்மையின் செயல்திறன் உயர்ந்திடும். பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் பயணிகள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய சென்னையை உருவாக்கும் நோக்கில், சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (ITS) திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையாளர்கள் முனைவர் வீ. ப. ஜெயசீலன், (சுகாதாரம்), செ.சரவணன், (பணிகள்), மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com