மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் சோதனை ராக்கெட் செப்டம்பரில் ஏவப்படுகிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான முதல் ஆள் இல்லாத சோதனை ராக்கெட் செப்டம்பரில் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் சோதனை ராக்கெட் செப்டம்பரில் ஏவப்படுகிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
Published on

ககன்யான் திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) மேற்கொள்ளப்படும் ககன்யான் திட்டமானது பூமியில் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் திட்டமாகும். இந்த ககன்யான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018-ம் ஆண்டு தனது சுதந்திர தின உரையின்போது அறிவித்தார்.

ககன்யானின் நோக்கம், மனிதர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டுவந்து இந்தியாவின் திறனை நிரூபிப்பதேயாகும். ககன்யான் எனப் பெயரிடப்பட்ட, இந்திய மண்ணில் இருந்து ஏவப்படும் முதல் மனித விண்வெளிப் பயணமானது, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டை கொண்டாடும் வகையில், ஆகஸ்டு 2022-ல் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்த திட்டம் தாமதமானது. தற்போது 2024-ல் இலக்கை அடைவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. ககன்யான் திட்டம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டால், அமெரிக்கா, ரஷியா, சீனா நாடுகளை தொடர்ந்து, மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் உலகின் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும்.

செப்டம்பரில் ககன்யான்

இந்த பணிக்காக 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டனர். பெங்களூருவில் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. சில உபகரணங்களை வழங்குவதற்காக ரஷியா மற்றும் பிரான்ஸ் விண்வெளி நிறுவனங்களுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷியாவிடம் இருந்து விண்வெளி உடைகள், விண்வெளி வீரர்கள் இருக்கைகள் போன்றவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்திற்காக 2 ஆள் இல்லாத ராக்கெட் அனுப்பி சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. அதில் முதல் சோதனை ராக்கெட் (டிவி-டி1) வருகிற செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்த சோதனையின்போது, ஆபத்து நேரத்தில் விண்வெளி வீரர்கள் தப்பிக்கும் அமைப்புகள், பாராசூட் சிஸ்டம் உள்பட விண்கலத்தின் அனைத்து அமைப்புகளும் சோதனை செய்யப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com