தஞ்சை, புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்: மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை பயணம் ரத்து

கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங் களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது.
தஞ்சை, புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்: மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை பயணம் ரத்து
Published on

தஞ்சாவூர்,

இந்த புயலினால் பலர் உயிரிழந்தனர். வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன.
வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டைக்கு சென்றார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முதல்- அமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளர் கிரிதரன், பாதுகாப்புப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராஜா ஆகியோர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் முதல் - அமைச்சர் வந்த ஹெலிகாப்டர் இறங்கியது. அங்கிருந்து கார் மூலம் மாப்பிள்ளையார்குளம் பகுதிக்கு முதல் - அமைச்சர் சென்றார். மாப்பிள்ளையார் குளம் பகுதியில் கஜா புயலால் சேதமடைந்த வீடுகள், கோவில், சாய்ந்து கிடந்த மரங்கள் உள்ளிட்ட இடங்களை முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் - அமைச்சா ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். ,

தொடர்ந்து அருகில் இருந்த நிவாரண முகாமிற்கு சென்று புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.51 லட்சத்து 34 ஆயிரத்து 300 மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கி, ஆறுதல் கூறினார்கள்.

நிவாரண முகாமில் தங்கியுள்ள 30 நபர்களுக்கும் ஆறுதல் கூறி விலையில்லா வேட்டிகள், சேலைகள் மற்றும் தலா 10 கிலோ அரிசியினையும் வழங்கினர்.

அதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக பட்டுக்கோட்டை வந்தார். வரும் வழியில் ஹெலிகாப்டரில் இருந்தபடியே புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார்.

பட்டுக்கோட்டைக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி கார் மூலம் பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள சூரப்பள்ளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 2 விவசாயிகளின் தென்னந்தோப்புகளில் நடந்து சென்று சேதம் அடைந்த தென்னை மரங்களை பார்வையிட்டார்.

பின்னர் அங்குள்ள விவசாயிகளிடம், புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அரசின் செலவில் அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள், முதல்- அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

சூரப்பள்ளத்தில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது புயலினால் இறந்த பட்டுக்கோட்டை சிவகொல்லை பகுதியை சேர்ந்த வேல்முருகனின் மகன்கள் ரமேஷ்குமார்(வயது 21), தினேஷ்குமார்(19), சதீஷ்குமார்(22), மாரியம்மாள் மகன் அய்யாதுரை(19), பாபநாசம் அருகே வெண்ணுக்குடி தோட்டம் கிராமத்தை சேர்ந்த சாரதாம்பாள்(70) ஆகியோரது குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா ரூ.10 லட்சத்தை வழங்கினார்.

இதேபோல வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையும், புயலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கும் நிவாரண பொருட்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கார் மூலம் புறப்பட்டு ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர், நாகை மாவட்டங்களில் புயல் சேத பாதிப்புகளை பார்வையிடுவதற்காகவும், நிவாரண உதவிகளை வழங்குவதற்காகவும் புறப்பட்டு சென்றார். முதல்-அமைச்சர் வந்த ஹெலிகாப்டர் காலை 11.05 மணியளவில் திருவாரூர் வந்தது. திருவாரூரில் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்காக வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக இறங்கு தளம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திருவாரூரில் காலை முதல் கனமழை பெய்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் மோசமான வானிலை நிலவியது. இதனால் ஹெலிகாப்டர் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் சுமார் 20 நிமிடங்கள் வானிலேயே வட்டமிட்டது. தரை இறங்கும் இடத்தில் புகை அடிக்கப்பட்டு உரிய சிக்கனல் தரப்பட்டது.

ஆனாலும் ஹெலிகாப்டர் தரை இறங்க முடியாத நிலையில் மோசமான வானிலை நிலவியதாலும், தரை இறக்கும் இடம் தற்காலிகமாக அமைக் கப்பட்டதாலும் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் தரை இறங்கவில்லை. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டரில் இருந்தபடியே பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

அப்போது கருமேக கூட்டம் சூழ்ந்த நிலையில் வான்வழி பாதை தெரியாத அளவு மிக மோசமான நிலை ஏற்பட்டதால் விமானி திருச்சி நோக்கி ஹெலிகாப்டரை இயக்கினார். மிகவும் சிரமப்பட்டு திருச்சி விமான நிலையத்தை முதல்- அமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டர் சென்றடைந்தது.

இதனால் திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் ரத்தானது.

திருச்சி விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் டி.வி.எஸ். டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். அங்கு சிறிது ஓய்வெடுத்து மதிய உணவு அருந்தினர். மேலும் அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மதியம் 2.30 மணி அளவில் சுற்றுலா மாளிகையில் இருந்து விமானநிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி காரில் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் மாலை 3.40 மணி அளவில் சென்னை புறப்பட்டு சென்றார்.

புயலால் பொதுமக்கள் துயரில் தவிப்பதை பார்வையிட வந்திருந்ததால் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை மற்றும் பூங்கொத்துகள் பெறவில்லை. மேலும் அதனை கொண்டு வந்தவர்களிடம் முன்கூட்டியே போலீசார் எடுத்துக்கூறி தடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com