முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது.
Published on

கந்தசஷ்டி விழா

நாமக்கல்-மோகனூர் சாலை காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை கோவிலில் கணபதி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து சக்தி ஹோமமும், சுப்பிரமணியர் ஹோமமும் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

பின்னர் பாலதண்டாயுதபாணி சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் நேற்று மாலையில் பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சியும், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், பாலப்பட்டி, பிராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரமும் நடந்தது. கந்த சஷ்டி விழாவையொட்டி பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் கடந்த 25-ந் தேதி மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை காலை யாக பூஜைகள், மூலவர் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், மாலையில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சூரசம்ஹார விழாவையொட்டி நேற்று காலை யாக பூஜைகளும், யாக வேள்வி நிறைவும், மஹா தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மாலை முருகப்பெருமான் சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் 6 மணிக்கு மேல் சூரசம்ஹார விழாவும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சூரனை வதம் செய்த முருகப்பெருமான் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலிலும் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதேபோல் பொத்தனூர் பச்சைமலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், சக்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகன், எல்லையம்மன் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விஜயகிரி பழனியாண்டவர், கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள முருகன், பாலப்பட்டியில் உள்ள கதிர்மலை முருகன் மற்றும் பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் உள்ளிட்ட கோவில்களில் கந்தசஷ்டியையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

ராசிபுரம்

ராசிபுரம் டவுன் புதுப்பாளையம் ரோட்டில் பிரசித்தி பெற்ற எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி திருவிழா, சூரசம்ஹார விழா, திருக்கல்யாண உற்சவ விழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிலையில் தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சாமி கோவிலை வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதையடுத்து நேற்று பாலமுருகன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து அம்மனிடம் இருந்து வேல் வாங்குதல், சத்குரு சம்ஹார திரிசதி ஹோமம் நடந்தன. மாலையில் பால் பன்னீர் ஆகியவற்றை கொண்டு பாலமுருகன் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் பாலமுருகன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் சூரசம்ஹார விழா நடந்தது. பாலமுருகன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு ஹவுசிங் போர்டு உள்பட முக்கிய வீதியில் வழியாக சென்று கோவிலை வந்து அடைந்தார். பாலமுருகன் எதிரே சூரபத்மன் சென்றார். முக்கிய இடங்களில் சூரபத்மனை வதம் செய்யும் காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com