காந்தியடிகள் எளிய ஆடை உடுத்த தொடங்கிய இடம்: நவீனமயமாக்கப்பட்ட மதுரை ‘காதிமார்ட்’ கட்டிடம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

காந்தியடிகள் எளிய ஆடை உடுத்த விரதம் தொடங்கிய இடமான மதுரை ‘காதிமார்ட்’ கட்டிடம் புதுப்பித்து நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காந்தியடிகள் எளிய ஆடை உடுத்த தொடங்கிய இடம்: நவீனமயமாக்கப்பட்ட மதுரை ‘காதிமார்ட்’ கட்டிடம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
Published on

சென்னை,

2017-18-ம் ஆண்டிற்கான கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் மானியக் கோரிக்கையில், கோயம்புத்தூர் லூம்வேர்ல்டு விற்பனை நிலையத்தின் உள் அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் தோற்றங்களை மறுசீரமைத்து, வாடிக்கையாளர்களை பெருமளவில் ஈர்க்கவும், கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்கவும் நவீனமயமாக்கப்படும் என்றும்,

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் மதுரை மாநகரில் தற்போது செயல்பட்டு வரும் காதிகிராப்ட் கட்டிடம் புதிய வடிவமைப்புகளுடன் கூடிய காதிமார்ட் என்ற பெயரில் நவீனமயமாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் லூம்வேர்ல்டு விற்பனை நிலையத்தின் தோற்றங்கள் மறுசீரமைக்கப்பட்டு, புதிய பொலிவுடன், பல்வேறு வசதிகளுடன் நவீனமயமாக்கப்பட்ட கோயம்புத்தூர் லூம்வேர்ல்டு விற்பனை நிலையம்;

1921-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள், மதுரை, மேலமாசி வீதியில் உள்ள காதி கிராப்ட் கட்டிடத்தில்தான், வறுமையில் வாடித் தவிக்கும் பாமர மக்களில் தானும் ஒருவர் என்பதை உணர்த்தும் வகையில் காந்தியடிகள் முழந்தாள் வரை ஆடை உடுத்தும் விரதத்தை தொடங்கி அன்று முதல் கடைப்பிடித்தார்.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க மதுரை, மேலமாசி வீதியில் உள்ள காதி கிராப்ட் கட்டிடம், அதன் பழமை மாறாமல் தற்போது சீரமைக்கப்பட்டு, புதிய தோற்றத்துடன் நவீனமாக அமைக்கப்பட்டுள்ள காதிமார்ட் கட்டிடம் ஆகியவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 36 வகுப்பறைகளைக் கொண்ட புதிய பள்ளிக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

மேலும், சென்னை புளியந்தோப்பு, திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டம் பதுவஞ்சேரி, கிளாம்பாக்கம் மற்றும் பாலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகக் கூடங்கள், பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் கழிவறைகள்; ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 7 விடுதிக் கட்டிடங்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலைய விடுதிக் கட்டிடம் என மொத்தம் 22 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணியில் இருக்கும்போது காலமான 21 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் 16 பேருக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கும், 5 பேருக்கு தட்டச்சர் பணியிடங்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com