

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இதுவரை சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 38 பேரை கைது செய்து, 15 பேரை சிறையில் அடைத்ததோடு, அவர்களிடமிருந்து 1,495 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் முழு கடையடைப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முழு கடையடைப்பின் போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவிட்டார்.
அதன் பேரில் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாழவல்லான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படியான நபர்கள் 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்ய மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம்அலி வழக்குப்பதிவு செய்து சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஏரல், சிவகளை பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் வத்திராப்பு (வயது 49) மற்றும் செபத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ் மகன் அந்தோணி ஆலோசனை பிரிட்டன்(38) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 698 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் அந்தந்த உட்கோட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் இதுவரை சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அதில் மாவட்டத்தில் அனைத்து உட்கோட்டங்களிலும் மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்து 38 பேர் கைது செய்யப்பட்டு 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 1,495 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.