காந்தி ஜெயந்தி; மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
காந்தி ஜெயந்தி; மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும், காந்தி ஜெயந்தி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், உலக பாரம்பரிய களமாக யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய குழுவால் அறிவிக்கப்பட்ட நீலகிரி மலை ரெயில்வேயில், அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையம்-ஊட்டி (வண்டி எண்: 06147) இடையே (ஒரு வழி பாதை) சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது.

அதன்படி, காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்படும் சிறப்பு மலை ரெயில் மதியம் 12.30 மணிக்கு குன்னூர் ரெயில் நிலையத்தில் வந்து சேரும். பின்னர் குன்னூரில் இருந்து மதியம் 12.55 மணிக்கு புறப்பட்டு, 2.25 மணிக்கு ஊட்டி ரெயில் நிலையம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயிலில் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அதில் 72 எண்ணிக்கையில் முதல் வகுப்பு இருக்கைகளும், 100 எண்ணிக்கையில் 2-வது வகுப்பு இருக்கைகளும் இடம் பெற்றிருக்கும். டிக்கெட் கட்டணத்தை பொருத்தவரை மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே முதல் வகுப்பு பெட்டியில் ரூ.1,100, 2-வது வகுப்பு பெட்டியில் ரூ.800, மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே முதல் வகுப்பு பெட்டியில் ரூ.1,450, 2-வது வகுப்பு பெட்டியில் ரூ.1,050, குன்னூர்-ஊட்டி இடையே முதல் வகுப்பு பெட்டியில் ரூ.500, 2-வது வகுப்பு பெட்டியில் ரூ.450-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com