காந்தி ஜெயந்தி: கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு

கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மாவட்ட கலெக்டர் அழகுமீனா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காந்தி ஜெயந்தி: கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு
Published on

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், காந்தியடிகளின் 157-வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு, மாவட்ட கலெக்டர் அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் இன்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து கலெக்டர் அழகுமீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அக்டோபர் மாதம் 2-ம் நாள் காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அக்டோபர் 2-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அபூர்வ சூரிய ஒளி காந்தியடிகளின் பீடத்தில் நண்பகல் 12 மணியளவில் விழும். இதனை காண உள்ளுர் மட்டுமல்லமால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள். அதனடிப்படையில் காந்தியடிகளின் பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும் சூரிய ஒளியினை பார்பதற்காகவும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

காந்தியடிகள் இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மட்டுமல்லாது, உலக நாடுகளே போற்றுகின்ற வகையில் செயல்பட்டவர். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த காந்தியடிகளின் பெருமைகளையும், தியாகங்களையும், அவரது அமைதி மார்க்கத்தையும், கொள்கைகளையும், அவரது வழிகாட்டுதலின்படி, நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்வது, காந்தியடிகளுக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் காந்தியடிகளின் போதனைகளை கேட்டறிந்து, சூரிய ஒளியினையும் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்ததோடு, கைத்தறி நூற்பு பணியினை பார்வையிட்டனர். மேலும் காமராஜர் நினைவு நாளையொட்டி, காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிகளில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத்பிரைட், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜர், மீன்வளம் துணை இயக்குநர் சின்னகுப்பன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, கன்னியாகுமரி நகர்மன்ற துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், நாகர்கோவில் மண்டல தலைவர் ஜவஹர், வட்டார வேளாண்மை விற்பனை குழு உறுப்பினர் தாமரை பாரதி, வட்டார மருத்துவக்குழு உறுப்பினர் பாபு, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் சரவணன், வழக்கறிஞர் சதாசிவம், உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com