விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் 80 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்ய அனுமதி

கோப்புப்படம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட இருக்கின்றன.
நாளை மறுநாள் (27-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, சிறியது முதல் பெரியது வரையிலான விநாயகர் சிலைகள் கடந்த 2 வாரங்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இதுபோன்று சிலைகள் வைக்க முன்கூட்டியே போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக சிலைகள் வைக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு 1,519 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த ஆண்டும் அதே இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். சில இந்து அமைப்புகள் கூடுதலாக சிலைகள் வைக்க அனுமதி கேட்டும் போலீசார் அதற்கு மறுத்துவிட்டனர்.
இதேபோல், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைப் பகுதிக்குள் சுமார் 700 சிலைகளுக்கும், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைப் பகுதிக்குள் சுமார் 600 சிலைகளுக்கும் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, நாளை மறுநாள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட இருக்கின்றன.
சிலையை வைப்பவர்கள் விழா கமிட்டி அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நிர்வாகிகளை நியமித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், அப்பகுதி போலீசாரும் ரோந்து சுற்றி வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 27-ந் தேதி வைக்கப்படும் சிலைகள் 30-ந் தேதி வரை 4 நாட்கள் பூஜை செய்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 31-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக சிலைகளை வாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னையில் பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், நீலாங்கரை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகரப் பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் பாதுகாப்புக்கு 16,500 போலீசார், 2 ஆயிரம் ஆயுதப்படை காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்பினரும், குடியிருப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் செய்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.






