அரசு நிலத்தை ஆக்கிரமித்து மின்வாரியத்துக்கு வாடகை விட்ட கும்பல்: சேலம் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் அலட்சிய செயல்

சேலம் மாவட்டத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி, அதை மின்வாரியத்துக்கு வாடகை விட்ட கும்பல் மீது கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளது அதிருப்தி அளிக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து மின்வாரியத்துக்கு வாடகை விட்ட கும்பல்: சேலம் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் அலட்சிய செயல்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ராஜா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், வெள்ளாளகுண்டம் கிராமத்தில் அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த 9 பேர் ஆக்கிரமித்துள்ளனர்.

அந்த நிலத்தில் சட்டவிரோதமாக கட்டுமானங்களை கட்டி மின்வாரிய அலுவலகம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனிநபர்களுக்கான கடைகள் என மாதம் ரூ.16 லட்சத்துக்கு வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

மின்வாரியத்துக்கு வாடகை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி வி.ஆலின் சுனேஜா நேரில் ஆஜராகி அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், வங்கி அந்த இடத்தை காலி செய்துவிட்டதாகவும், சில தனிநபர்கள் வாடகை செலுத்த மறுத்து அங்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி அதை அரசுக்கு, அதாவது மின்சார வாரியத்துக்கே வாடகைக்கு விட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகிறது. இதுபோன்ற செயல்களை அனுமதித்தால், பேராசைக்காரர்களும், குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அரசு நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

அதிகாரிகள் அலட்சியம்

இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. நில ஆக்கிரமிப்பு தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய அவசியமே அதிகாரிகளுக்கு இல்லை. இந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் செயல்பட்டு இருப்பது அதிருப்தியளிக்கிறது.

எனவே அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலங்களை உடனடியாக மீட்டு, சட்டவிரோத கட்டுமானங்களை இடித்து, அரசுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் நிதி இழப்புகளை வசூலிப்பதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com