

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் போலீசார் கடந்த மாதம் ஆரம்பம்பாக்கம் சோதனைச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிவேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த அண்ணாதுரை (வயது 44) என்பவரை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட அண்ணாதுரை மீது ஏற்கனவே கஞ்சா கடத்தியதாக 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று அண்ணாதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.