4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுகிராமத்தை சேர்ந்த சஞ்சீவ் (வயது 22), சங்கராபுரம் அருகே புதுபல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரன் (23), கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோட்டை சேர்ந்த வசந்தன் என்கிற நித்திஷ் (19), சின்னசேலத்தை சேர்ந்த பூவரசன் என்கிற மாயி (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களில் சஞ்சீவ், பரமேஸ்வரன், வசந்தன் ஆகியோரை வேலூர் மத்திய சிறையிலும், பூவரசனை கடலூர் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

சட்டம்-ஒழுங்கு

இவர்கள் வெளியே வந்தால் பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும். மேலும் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால், இவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், சஞ்சீவ் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசாருக்கு கலெக்டர் ஷரவன்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து சஞ்சீவ் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் அந்தந்த சிறை அலுவலர்கள் மூலம் அவர்களுக்கு போலீசார் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com