கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மரக்காணம் விஷ சாராய கொலை வழக்கில் கைதானவர்களில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த மே மாதம் 13-ந் தேதியன்று விற்கப்பட்ட, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்தவர்களில் எக்கியார்குப்பத்தை சேர்ந்த எஸ்.சங்கர், சுரேஷ், தரணிவேல், ராஜமூர்த்தி, ராமு மனைவி மலர்விழி, எஸ்.விஜயன், கேசவவேலு, எம்.விஜயன், ஆபிரகாம், சரத்குமார், மரக்காணத்தை சேர்ந்த எஸ்.மண்ணாங்கட்டி, எஸ்.சங்கர், ராஜவேலு, கன்னியப்பன் ஆகிய 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர்.

இச்சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட் என்கிற பிரேம்குமார், வானூர் பெரம்பை பகுதியை சேர்ந்த பிரபு என்கிற வெங்கடாஜலபதி ஆகிய 11 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதன்பேரில் கைதான 11 பேர் மீதும் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

இதனிடையே இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இச்சம்பவத்தில் கைதான சாராய வியாபாரிகள் அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி ஆகிய 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் அவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டார்.

இதையடுத்து அமரன் உள்ளிட்ட 5 பேரையும் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் 5 பேருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com