சேலம் வழியாக கேரளாவிற்கு ரெயிலில் கஞ்சா கடத்தல் - 10 கிலோ பறிமுதல்

கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் வழியாக கேரளாவிற்கு ரெயிலில் கஞ்சா கடத்தல் - 10 கிலோ பறிமுதல்
Published on

சேலம்,

வடமாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரெயில்வே போலீசாரும் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அப்போது ரெயிலில் கஞ்சா கடத்துபவர்களை போலீசார் கைது செய்கின்றனர்.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 13351) நேற்று காலை பொம்மிடி-சேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, ரெயிலின் பின்பக்கத்தில் உள்ள முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று 2 பைகள் கிடந்தன. இதை போலீசார் பிரித்து பார்த்தனர். இதில் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கஞ்சா சிக்கியது குறித்து அங்கிருந்த பயணிகளிடம் போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர் குறித்து தெரியாது என்றனர்.

அதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சேலம் வழியாக கேரளாவிற்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com