திருப்பூருக்கு ரெயிலில் கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இருவரை சேலத்தில் போலீசார் கைதுசெய்தனர்.
சேலம்,
ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக ரெயிலில் சிலர் கஞ்சா கடத்துவதாக சேலம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று காலை வட மாநிலத்தில் இருந்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது ரெயிலில் சந்தேகத்தின் பேரில் நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை சேலம் வழியாக திருப்பூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தேனியை சேர்ந்த சேதுபதி மற்றும் திருப்பூரை சேர்ந்த முத்துலிங்கம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 43 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் ஆந்திராவில் யாரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்தனர்? என்றும், திருப்பூருக்கு அவர்கள் யாரிடம் விற்க முயற்சி செய்தனர்? என்பது குறித்தும் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






