வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.35 லட்சம் கஞ்சா பறிமுதல் - இளைஞர் கைது

கோப்புப்படம்
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் வேதாரண்யம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை மறித்து சோதனை செய்தனர். அந்த காரில் மூட்டை, மூட்டையாக கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர் தாலுகா பாலிசெர்லாவாரிபாலத்தை சேர்ந்த வெங்கடகிருஷ்ணா ரெட்டி, என்பதும், ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான 105 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வெங்கடகிருஷ்ணா ரெட்டியை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் வெங்கடகிருஷ்ணா ரெட்டியை போலீசார், கோர்ட்டில் ஆஜர் செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.






